

கரோனா வைரஸ் 2-வது அலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் உள்ளிட்ட பலர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 100 மருத்துவர்களும், அடுத்ததாக பிஹார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், ஆந்திராவில் 22 மருத்துவர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் 31 மருத்துவர்கள், தெலங்கானாவில் 20 மருத்துவர்கள், மேற்கு வங்கம், ஒடிசாவில் தலா 16 மருத்துவர்கள், மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்''.
இவ்வாறு ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.
''கரோனா வைரஸ் 2-வது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் அலையைவிட, கரோனா 2-வது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது'' என ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ஜெயலால் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.