

உத்தரப் பிரதேசம் உன்னவ் நகரில் ஊரடங்கை மீறியதாகக் கூறி வீட்டின் முன் காய்கறி விற்பனை செய்த 17 வயதுச் சிறுவனை போலீஸார் மனிதநேயமற்றுத் தாக்கியதில் அந்தச் சிறுவன் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர், போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் என இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. உன்னவ் மாவட்டம், பங்கார்மாவு நகரில் உள்ள பாத்பூரி பகுதியில் 17 வயதுச் சிறுவன் நேற்று தனது வீட்டுக்கு வெளியே காய்கறிகள் விற்பனை செய்தார். இதைப் பார்த்த இரு போலீஸார் ஊரடங்கை மீறிவிட்டதாகக் கூறி அந்தச் சிறுவனை லத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
குடும்பத்தினர் வந்து தடுத்தபோதும் விடாத போலீஸார் இருவரும் அந்தச் சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். போலீஸாரின் தாக்குதலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக போலீஸார் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அந்தச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே இறந்துவி்ட்டார் எனத் தெரிவித்தார். சிறுவன் உயிரிழந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவரவே அப்பகுதியில் மக்கள் கூடி போலீஸாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, லக்னோ தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர்.
இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து தலையிட்டுப் பொதுமக்களையும், சிறுவனின் குடும்பத்தினரையும் சமாதானம் செய்தனர். அந்த குறிப்பிட்ட இரு போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.
உன்னவ் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், “சிறுவனைத் தாக்கிய விவகாரத்தில் தலைமைக் காவலர் விஜய் சவுத்ரி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார், ஊர்க்காவல் படை வீரர் சத்யபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.