

கரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை கடனுக்கான வட்டி செலுத்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் சலுகை அளித்து மக்களின் நிதி அழுத்தத்தை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இந்த மனு வரும் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர். ஷா, அசோக் பூஷாந் ஆகியோர் அமர்வு இந்த மனுவை விசாரிக்கிறது. இந்த மனுவை வழக்கறிஞர் விஷார் திவாரி தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்துவரும் இந்த காலத்தில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மக்களுக்கு அளித்துள்ள கடனுக்கு வட்டித் தள்ளுபடி வழங்கிட வேண்டும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் அல்ல கரோனா பரவல் முடியும் வரை சலுகை அளிக்கவேண்டும்.
இந்த காலக்கட்டத்தில் கடனை , வட்டியை செலுத்த முடியாத மக்கள் மீது எந்த வங்கியும், நிதி நிறுவனம் அவர்களின் சொத்துக்களை ஏலம் விடாமல் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடனை திருப்பிச் செலுத்த முடியாத, வட்டி செலுத்த முடியாத மக்களின் வங்கிக்கணக்கை இந்தக் காலகட்டத்தில் வாராக் கடன் பட்டியலிலும் சேர்க்கக்கூடாது. கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையில் மக்களுக்கு கூடுதலாக எந்த அழுத்தமும் தராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு நிதிச்சுமை குறைய வேண்டும், மக்கள் தங்களின் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது. நிதிக்கொள்கைகள் அரசால்தான் வகுக்கப்படுகின்றன. நிதிக்கொள்கைக்கு அப்பாற்றபட்ட இந்த காலக்கட்டத்தில் வாழ்வதே கேள்விக்குறியாக இருக்கிறது.ஆதலால் நம்நாட்டு மக்கள் மரியாதையுடனும், எந்தவிதமான மனஅழுத்தமும் இன்றி வாழ வேண்டும்.
லாக்டவுன் நடவடிக்கை பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு இயல்பாகவே பொருளாதார நெருக்கடி , அழுத்தம், மருத்துவ அவசரநிலை போன்ற ஏற்பட்டு மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். ஏராளமான பொருளாதார இழப்புகளையும், குடும்பத்தினர் இழப்புகளையும் சந்தித்துள்ளனர்.
கரோனா 2-வது அலை ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் லாக்டவுனுக்குள் தள்ளியிருக்கிறது. கரோனா 2-வது அலை பேரழிவை கொண்டு வந்திருக்கிறது, அதிலும் லாக்டவுன் நடவடிக்கை பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு திவாரி தெரிவித்துள்ளார்.