Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

கருப்பு பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி

கருப்பு பூஞ்சை தொற்றை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இந்நோய் பாதிப்புக்கு உயிரிழக்கின்றனர். வைரஸ் பர வலைத் தடுக்க பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும், வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடி யாமல் அரசு இயந்திரங்கள் திணறி வருகின்றன.

இதுபோன்ற சூழலில், ‘மியூ கோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றானது, கரோனாவுக்கு இணையாக பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள் ளது. கடந்த ஒருசில வாரங்களி லேயே, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோய் கட்டுப் பாட்டில் இல்லாதவர்கள், ஸ்டிராய்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட கரோனா நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகி யோர் இந்த பூஞ்சை பாதிப்புக்கு அதிக அளவில் ஆளாவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன..

கண், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இத்தொற்றை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண் டியது அவசியம். இல்லையெனில், உயிரிழப்பைகூட இது ஏற்படுத் தும் என மருத்துவர்கள் எச் சரிக்கின்றனர்.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றை 1897-ம் ஆண்டின் தொற்று நோய் சட்டத்தின்கீழ் கொள்ளை நோயாக (எபிடெமிக்) அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டாலும், அதுகுறித்த விவரங்களை, மாவட்ட சுகாதார அலுவலர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது விதியாகும். அப்பொழுதுதான், இந்நோய் குறித்த சரியான தரவுகளை சேகரிக்கவும், தொற்றை சமாளிக்கும் வழிமுறைகளையும் அரசால் வகுக்க முடியும்.

இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து வெளி யிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி, கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, கரோனா, காசநோய், காலரா, டிஃப்தேரியா ஆகிய நோய்கள்தான் கொள்ளை நோய்களாக இதுவரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வரிசையில் கருப்பு பூஞ்சை தொற்றும் இணைகிறது.

ஜூன் மாதத்துக்குள் ‘அம்ஃபோடெரிசின் - பி’ மருந்துகள் கிடைக்கும்

புதுடெல்லி: கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் 5.7 லட்சம் ‘அம்ஃபோடெரிசின் - பி' மருந்துகள் கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ‘அம்ஃபோடெரிசின் - பி' மருந்தின் மூலம் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்து மூலமாக ஆயிரக்கணக்கான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். எனவே, இந்த மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு கிடைக்க செய்வதை மத்திய அரசு உறுதி செய்யும். அந்த வகையில், இம்மருந்தின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், இறக்குமதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அடுத்த மாதத்துக்குள் (ஜூன்) இந்தியாவில் 5.7 லட்சம் ‘அம்ஃபோடெரிசின் - பி' மருந்துகள் கிடைக்கப் பெறும். இன்றைய சூழலில், இந்த மருந்தை 5 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. தேவை கருதி, மேலும் 6 நிறுவனங்களுக்கு ‘அம்ஃபோடெரிசின் - பி' மருந்தை தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x