

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்துக்கு, இந்தத் திட்டம் காலாவதியானது மற்றும் காப்பியடிக்கப்பட்டது என்று பாஜக பதிலளித்துள்ளது.
கரோனா தொற்று நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.
அக்கடிதத்தில், ''கரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். குடும்பத்தில் சம்பாதிக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் கவலையளிக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு வலிமையான ஆரோக்கியமான எதிர்காலத்தை அளிக்க நாடு கடமைப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையுமோ அல்லது சம்பாதிக்கும் பெற்றோரில் ஒருவரையோ இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகள் மூலம் இலவசக் கல்வி அளிக்க வேண்டும். இதுகுறித்துப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்'' என்று சோனியா காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, ''இந்தத் திட்டம் காலாவதியானது மற்றும் காப்பி அடிக்கப்பட்டது. ஏற்கெனவே ஏராளமான மாநில அரசுகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இத்திட்டம் இல்லை.
பிரதமருக்குக் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக அமரிந்தர் சிங்க்குக்கும் (பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர்) அசோக் கெலாட்டுக்கும் (ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர்) கடிதம் எழுதுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.