

ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று ஒரு நாள் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ. 2.28 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி தாக்கல் செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:
உயிரின் மதிப்பை நான் நன்கு அறிவேன். இதன் காரணமாகவே நான் ஆட்சிக்கு வந்ததும், ஒய்.எஸ்.ஆர். ஆரோக்கிய இலவச மருத்துவத் திட்டத்தில் 2400 நோய்களை இணைத்தேன். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் வரை இலவச திட்டத்தில் பயன் பெறலாம். கரோனா நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய் கூட தற்போது இலவச மருத்துவத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
கரோனா முதல் அலை பரவிய போது, ஆந்திராவில் 261 மருத்துவமனைகள் மட்டுமே கரோனா மருத்துவமனைகளாக செயல்பட்டன. ஆனால் தற்போது, 649 மருத்துவமனைகள் கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதுதவிர, பொது இடங்களும் கரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஜெகன் பேசினார்.