

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதல் குறித்து அப்போது விவாதித்தார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி பலமுறை ஆலோசனை நடத்திவிட்டார். கடந்த 2020ம் ஆண்டில் முதல்முறையாக கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அவ்வப்போது மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
கடந்த 18-ம் தேதி முதல்கட்டமாக 9 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக ( 20ம் தேதி) 10 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் உடன் இருந்தனர். அப்போது அவர் பேசியதாவது:
கிராமங்களை கரோனாவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். பாதிப்பு குறைகிறது என்பதால், தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. 15 நாட்களுக்கான தடுப்பூசி திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தடுப்பூசி தொடர்பான கால அட்டவணையை பராமிக்க, தடுப்பூசி விநியோகம் உங்களுக்கு உதவும்.
கரோனாவானது, உங்களது பணியை மிகவும் கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. உள்ளூர் அனுபவங்களை பயன்படுத்துவது முக்கியம். அதேநேரத்தில் ஒரே நாடு என்ற எண்ணத்துடன் நாம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.