

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அமைப்புகள் புதுடெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஏற்கெனவே எப்சிஆர்ஏ கணக்கு வைத்திருப்பவர்கள், புதுடெல்லி சன்சாத் மார்க் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் வரும் ஜூன் 30ம் தேதி வரை எப்சிஆர்ஏ கணக்கு தொடங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்பின் புதுடெல்லி பிரதான கிளையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் எப்சிஆர்ஏ கணக்கு தவிர, வேறு எந்த கணக்கிலும், வெளிநாட்டு நன்கொடை பெற தகுதியில்லை.
புதுடெல்லி சன்சாத் மார்க் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் எப்சிஆர்ஏ கணக்கு தொடங்கிய தேதி அல்லது 01.7.2021 இதில் எது முன்போ அன்றிலிருந்து வெளிநாட்டு நன்கொடையை வேறு எந்த கணக்கிலும் பெற முடியாது என்பதை, ஏற்கெனவே மத்திய அரசின் பதிவு சான்றிதழ் அல்லது அனுமதி பெற்ற அனைத்து நபர்கள் / தொண்டு நிறுவனங்கள் / சங்கங்கள் குறித்து கொள்ள வேண்டும் என பொது அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு www.fcraonline.nic.in என்ற இணையதளத்திலும் உள்ளது.
ஏற்கெனவே எப்சிஆர்ஏ கணக்கு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டதிருத்தத்தின்(2010) 17(1) பிரிவின் கீழ் புது தில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் எப்சிஆர்ஏ கணக்கு தொடங்க 31.3.2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த சட்ட திருத்தம் 2020 செப்டம்பர் 29 ஆம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது எழுந்துள்ள கொவிட் சூழலை முன்னிட்டு, தொண்டு நிறுவனங்கள், திருத்தப்பட்ட சட்ட விதிமுறைக்கு சுமூகமாக மாறுவதை உறுதி செய்ய இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.