Published : 20 May 2021 12:22 PM
Last Updated : 20 May 2021 12:22 PM

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்? -  புதிய பரிந்துரைகள் 

புதுடெல்லி

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் புதிய பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றது.

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் குறித்த புதிய பரிந்துரைகளை கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலவரம் மற்றும் சர்வதேச அறிவியல் ஆதாரம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டன.

பின்வரும் பரிந்துரைகளை ஏற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அவை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது.

பின்வரும் சூழ்நிலைகளில் கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதை தாமதப்படுத்துதல்:

1) சார்ஸ்-2 கோவிட்-19 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள்: குணமடைந்து மூன்று மாதங்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதை தாமதப்படுத்த வேண்டும்.

2. சார்ஸ்-2 மோனோகுளோனல் ஆண்டிபாடி அல்லது கொண்வலசன்ட் பிளாஸ்மா பெற்றுள்ள சார்ஸ்-2 கோவிட்-19 நோயாளிகள்: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மூன்று மாதங்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதை தாமதப்படுத்த வேண்டும்.

3. முதல் டோஸ் பெற்று இரண்டாம் டோஸ் பெறுவதற்கு முன் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள்: குணமடைந்து மூன்று மாதங்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதை தாமதப்படுத்த வேண்டும்.

4. வேறு ஏதேனும் இதர தீவிர நோயுடைய, மருத்துவமனை அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை தேவைப்படும் நபர்களும் கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதை நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும்.

கோவிட்-19 தடுப்பு மருந்து பெற்ற 14 நாட்களுக்கு பிறகு அல்லது கோவிட் பாதிப்பு இருந்திருந்தால் தொற்று இல்லை என்று ஆர்டிபிசிஆர் சோதனையில் தெரியவந்து 14 நாட்களுக்கு பிறகு எந்த ஒரு தனிநபரும் ரத்ததானம் செய்யலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பு மருந்தை பொருத்தவரை, நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் ஆய்வில் இது உள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகளை கருத்தில் கொள்ளுமாறும் அவற்றை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x