Published : 20 May 2021 09:53 AM
Last Updated : 20 May 2021 09:53 AM

திரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்த புதுமையான தீர்வு; ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி

கோவிட் நோயாளிகளுக்கான திரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்தி வைக்கும் புதுமையான தீர்வை இந்திய ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

கோவிட் இரண்டாம் அலைக்கு எதிராக இந்தியாவில் அதிக அளவில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. கிரையோஜெனிக் கொள்கலன்களில் திரவ வடிவில் ஆக்சிஜன் எடுத்து செல்லப்பட்டதால், திரவ ஆக்சிஜனை ஆக்சிஜன் வாயுவாக மாற்றி அதை நோயாளிகளுக்கு விரைந்து வழங்குவது மருத்துவமனைகளுக்கு சவாலாக இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, இதற்கான தீர்வை கண்டறிய மேஜர் ஜெனரல் சஞ்சய் ரிஹானி தலைமையிலான இந்திய ராணுவ பொறியாளர்கள் குழு களத்தில் இறங்கியது. வாயு சிலிண்டர்களின் பயன்பாடு இல்லாமல் ஆக்சிஜனை கிடைக்கச் செய்வதற்கான தீர்வை கண்டறிவதற்காக ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது.

ஏழு நாட்களுக்கும் மேலாக சிஎஸ்ஐஆர் மற்றும் டிஆர்டிஓ ஆகியவற்றின் நேரடி ஆலோசனை மற்றும் ஆதரவுடன் பணியாற்றிய ராணுவப் பொறியாளர்கள், ஆக்சிஜனை நோயாளிகளுக்கு நேரடியாக எடுத்துச் செல்லக்கூடிய தீர்வு ஒன்றை கண்டறிந்தனர்.

திரவ ஆக்சிஜனை ஆக்சிஜன் வாயுவாக தேவையான அழுத்தத்தில் மாற்றுவதற்காக, சுய அழுத்தத்துடன் கூடிய திரவ ஆக்சிஜன் சிறிய கொள்ளளவு சிலிண்டரை (250 லிட்டர்) பயன்படுத்திய இக்குழு, அதை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆவியாக்கி மற்றும் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய, கசிவு ஏதும் இல்லாத வால்வுகளுடன் இணைத்து வெற்றி கண்டது.

இதன் மாதிரி அமைப்பு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பேஸ் மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்காக இதன் நடமாடும் மாதிரியும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. குறைந்த செலவுடன் அமைக்கப்படக் கூடிய இந்த அமைப்பு, பாதுகாப்பானதும் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x