Published : 20 May 2021 05:35 AM
Last Updated : 20 May 2021 05:35 AM

ஹைதராபாத்தை மையமாக கொண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பு

ஹைதராபாத்தை மையமாக கொண்டு கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக பாரத் பையோடெக் பார்மா நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்தது. இது 81 சதவீத செயல்திறன் கொண்டது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை, ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் பார்மா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும் நம் நாட்டில் அனுமதி பெற்றது. தற்போது 50 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் அப்போலோ ஊழியர்களுக்கும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவன ஊழியர்களுக்கும் வெள்ளோட்டமாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 91.4 சதவீத செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால், தடுப்பூசிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்ட், கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் - வி ஆகிய 3 தடுப்பூசிகளை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளை தயார் செய்ய முன் வந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு பார்மா நிறுவன மான பையோலாஜிகல்-இ நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரு பார்மா நிறுவனங்களும் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரிக்குமென பையோலாஜிகல்-இ நிறுவன நிர்வாக இயக்குநர் மஹிமா தாட்லா கூறியுள்ளார்.

ஆண்டுக்கு 7.5 கோடியில் இருந்து 8 கோடி டோஸ்கள் வரை நாங்களே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் மஹிமா தாட்லா உறுதி படுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x