Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

தகவல் பாதுகாப்பு கொள்கையில் வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள மாற்றம் நியாயமற்றது: கொள்கை மாற்றத்தை திரும்பப்பெறக் கோரி மத்திய அரசு கடிதம்

பயனாளர்கள் தகவல் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்திருக்கும் கொள்கை மாற்றமானது நியாயமற்றது என்றும் அந்தக் கொள்கை மாற்றத்தை வாட்ஸ்அப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இரண்டாம்முறையாக கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும்,திருப்திகரமான பதில் கிடைக்கவில்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் அதன் தகவல் பாதுகாப்புத் தொடர்பான கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருந்தது. அதாவது, வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள், வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படும். பயனாளர்கள் இந்தக் கொள்கை மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்தப் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் உள்ள சேவைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இந்தியப் பயனாளர்களின் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பவும், அந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல், மே 15-க்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் கூறியது.

பாரபட்சமான முடிவு

இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த நடைமுறையானது தகவல் பாதுகாப்பு தொடர்பாக இந்தியக் குடிமக்களின் உரிமையைப் பறிக்கக்கூடியதாக உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மே 18-ம் தேதி எழுதிய கடிதத்தில், ‘ஐரோப்பிய நாடுகளில் உள்ள பயனாளர்கள் வாட்ஸ்அப் நிறு வனத்தின் கொள்கை மாற்றத்தை ஏற்காமல், தொடர்ந்து அதன் சேவையைப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியப் பய னாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மிகவும் பாரபட்சமானது’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘இந்தியர்கள் அன்றாட தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ்அப் செயலியையே முதன்மையாக சார்ந்து இருக்கின்றனர். இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, இந்தியப் பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது நியாயமற்ற செயல்பாடு’ என்றும் குறிப்பிட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x