Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

ஊரடங்கின் போது ஏழைகளுக்கு வழங்குவதற்கான உணவு பார்சல்களில் அன்பை பொழிந்த சிறுவன்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

ஊரடங்கு சமயத்தில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு பார்சல்களில் அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களை எழுதிய சிறுவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என்ற போதிலும், இந்நடவடிக்கையால் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. வேலை இல்லாததால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் இக்குடும்பங்கள், எதிர்காலம் குறித்த கவலையில் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், மனிதாபிமானம் கொண்ட பல இளைஞர்களும், தொண்டு நிறுவனங்களும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதை ஒரு கடமையாக செய்து வருகின்றனர். இதுபோன்ற உதவிகள் தான், ‘‘தங்கள் மீதும் அக்கறைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்’’ என்ற உணர்வையும், வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் ஏழைகளுக்கு ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ஒரு சிறுவனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், ஏழைகளுக்காக தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு பார்சல்களின் மேலே 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற வாசகத்தை இந்தியில் அந்த சிறுவன் எழுதுகிறான். ‘‘உணவை நமது பெற்றோர்கள் தானே வழங்குகிறார்கள், நமக்கு என்ன’’ என்று இருக்காமல், அந்த உணவை வாங்குவோரின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை எழுதிய அந்த சிறுவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x