Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பார்வையிட்டார்; குஜராத்துக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு

குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளுக் காக ரூ.1,000 கோடி வழங்குவதாக அறிவித் துள்ளார். புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான ‘டவ்-தே’ புயல், அதிதீவிர புயலாக மாறியது. இதன்காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மான டையூ மற்றும் டாமன் ஆகிய இடங் களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த புயல், குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது. இதையடுத்து, அங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற் கொண்டது. கடலோர பகுதிகளில் இருந்து 2 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு, பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்புப் படையினரும், மருத்துவம் மற்றும் சுகாதார குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே ‘டவ்-தே’ புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கன மழையும் கொட்டித் தீர்த்தது. குஜராத்தின் 46 தாலுகாக்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதில் குஜராத்தில் 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் விழுந்தன. சுமார் 6 ஆயிரம் கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சூறைக்காற்று மற்றும் மழைக்கு 13 பேர் உயிரிழந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் மற்றும் கனமழைக்கு மகாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிர தமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் குஜராத் மாநிலம் பவ் நகர் என்ற இடத்துக்கு பிரதமர் மோடி வந் தார். அவரை முதல்வர் விஜய் ரூபாணி வர வேற்றார். பின்னர், அங்கிருந்து விமானத்தில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கடற்கரை பகுதிகளான உனா, ஜப்ராபாத், மகுவா ஆகிய இடங்களை பார்வையிட்டார். யூனியன் பிரதேசமான டையூவையும் பார்வையிட்டார். பிரதமருடன் முதல்வர் விஜய் ரூபாணியும் சென்றார். மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமருக்கு அதிகாரிகள் சுட்டிக் காட்டி விளக்கினர்.

ஆய்வை முடித்துக் கொண்டு, அகமதா பாத் சென்ற பிரதமர் மோடி, அங்கு முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

நிவாரணப் பணிகளுக்காக மாநில அர சுக்கு தேவையான அனைத்து உதவிகளை யும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து குஜராத்துக்கு உடனடி இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், புயலால் பாதிக் கப்பட்ட மாநிலங்களில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஓஎன்ஜிசி ஊழியர்கள் 22 பேர் உயிரிழப்பு

மும்பை: புயலில் சிக்கி விபத்துக்குள்ளான ஓஎன்ஜிசியின் சிறிய வகை கப்பலில் இருந்த ஊழியர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 51 பேரை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘டவ் தே’ புயல் கரையைக் கடந்தபோது, பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில், மும்பை கடல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் பணியில் இருந்த ஊழியர்களின் சிறிய கப்பல் சிக்கியது. சூறாவளி காற்றால் அந்தக் கப்பல் எண்ணெய் கிணற்றில் மோதி மூழ்கியது.

மும்பை துறைமுகத்தில் இருந்து 35 நாட்டிகல் மைல் தொலைவில் மூழ்கிய அந்தக் கப்பலில் 261 ஊழியர்கள் இருந்தனர். விபத்து ஏற்பட்டதும்

கடற்படை கப்பல்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. நேற்று வரை 188 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 51 பேரை காணவில்லை.

அவர்களை தேடும் பணியில் கடற்படையின் மீட்புப் படகுகள், பி8ஐ விமானம் மற்றும் சீ கிங் ஹெலிகாப்டர்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x