

டெல்லி நீதிமன்றத்தில் தாதா கும்பல் ஒன்று போட்டி கும்பலைச் சேர்ந்த ஒருவர் மீது நேற்று துப் பாக்கிச்சூடு நடத்தியது. இதில் போலீஸ் காவலர் ஒருவர் உயி ரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
கிழக்கு டெல்லி, கர்கர்டூமா பகுதியில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்கள் செயல் பட்டு வருகின்றன. இங்கு நீதி மன்ற அறை எண் 73-ல் நேற்று காலை 11 மணியளவில் இர்பான் என்ற விசாரணை கைதி ஆஜர் படுத்தப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் இர்பானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இர்பான், அவரது அருகில் நின்றிருந்த தலைமை காவலர் ராம்குமார் மற்றும் மற்றொரு காவலர் மீது குண்டுகள் பாய்ந்தன.
இந்த திடீர் தாக்குதலால் வழக்கு தொடர்பாக அங்கு வந்தி ருந்தவர்கள் அலறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் மெட்ரோபாலி டன் மாஜிஸ்திரேட் சுனில் குப்தா நூலிழையில் தப்பினார். ஒரு குண்டு அவரது நாற்காலியை உரசிய படி சென்று சுவரில் மோதியது.
இந்நிலையில் தப்பியோட முயன்ற அந்த கும்பலை நீதிமன்ற வளாகத்தில் இருந்த மற்ற காவலர்களும் வழக்கறிஞர்களும் மடக்கிப் பிடித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காய மடைந்த மூவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். இதில் தலைமைக் காவலர் ராம்குமார் மருத்துவமனை செல் லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இர்பானை நோக்கி தாக்குதல் நடத்தியவர்கள் அவரது எதிரி கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இர்பான் நீதிமன்றம் கொண்டுவரப்படுவதை அறிந்து, அங்கு காத்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த 4 இளைஞர்களும் வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளை சேர்ந் தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் ‘மைனர்’களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.
உயிரிழந்த தலைமை காவலர் ராம்குமார், டெல்லி காவல் துறையில் 3-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். விசாரணைக் கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
ராம்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. காயமடைந்த மற்றொரு காவலர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆவார்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.