

அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் உயிரிழப்பைத் தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், உளவுப் பணிகளில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
சீன ராணுவ அச்சுறுத்தல்
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவை மறைமுக கூட்டணி அமைத்துள்ளன. 3 நாடுகளும் இணைந்து அடிக்கடி போர் ஒத்திகையும் நடத்தி வருகின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதன்காரணமாக கடந்த 1962 அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது.
அதன்பிறகும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லைகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி ஊடுருவது தொடர்கதையாக உள்ளது.
எனவே சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவின் அதிநவீன அவெஞ்ஜர், பிரிடேட்டர் ரகங்களைச் சேர்ந்த 100 ஆளில்லா விமானங்களை வழங்குமாறு அந்த நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.13,261 கோடி ஆகும்.
இதுதவிர அமெரிக்க கூட்டுப் படைகளின் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு பிராந்திய (எம்டிசிஆர்) அமைப்பில் இணையவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இத்தாலி மாலுமிகள் விவகாரத்தால் அந்த நாடு இந்தியாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எனினும் இன்னும் சில மாதங்களில் எம்டிசிஆர் அமைப்பில் இந்தியாவும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா விரும்புவது உண்மைதான், இருநாடுகளுக்கும் இடையே ராணுவ உறவு வலுவடைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வாங்கப்பட்டால் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான கடல் எல்லை, நிலப்பரப்பு எல்லையில் கண்காணிப்பு, உளவுப் பணி தீவிரப்படுத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே இஸ்ரேல் நாட்டில் இருந்து ரூ.2653 கோடியில் ரூ. 10 ஆளில்லா போர் விமானங்களை வாங்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த போர் விமானங்களை ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.