

கும்பமேளா திருவிழாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். நம் தேசத்தின் கலாச்சாரம், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், பூஜைகள் திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன என்று ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் தீவிரமாகப் பரவிய நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா நடந்தது. ஏப்ரல் மாதம் முழுவதும் 70 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் இந்த மதரீதியான நிகழ்ச்சி நடந்தது கரோனா சூப்பர் ஸ்பிரெட்டராகப் பார்க்கப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி குறித்து நேற்று பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதில், ''இந்தியா, பிரதமர் மோடியின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக கும்பமேளா திருவிழா, தடுப்பூசி பற்றாக்குறை, கரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்ய டூல்கிட்டைத் தயாரித்துள்ளது'' என்று பாஜக குற்றம் சாட்டியது. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இந்தச் சூழலில் ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
''நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவியதற்கு ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா திருவிழாதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யும் வகையில் டூல்கிட்டைத் தயாரித்துள்ளார்கள். உண்மையில் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து கொண்டிருந்தபோதே, பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வந்தது, குறிப்பாக உத்தரகாண்டில் கரோனா தொற்று நிலவரம் தீவிரமாக இல்லை.
இந்தியாவின் கலாச்சாரம், சடங்குகள், விழாக்கள், நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் போன்றவை திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன. கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல. சாதுக்கள் சமூகம் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறது.
பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட சில நாட்களில் கும்பமேளா திருவிழாவை முடித்துவிட்டோம். உயர்ந்த மதிப்புகள், பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த தேசத்தில் நீங்கள் பிறந்திருந்தால், கும்பமேளாவை அரசியலாக்குவது சரியானது அல்ல''.
இவ்வாறு அவ்தேஷானந்த் கிரி மகராஜ் தெரிவித்துள்ளார்.