

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றள்ள ஜோசப் ஜேம்ஸுக்கு ரூபாய் 2.5 லட்சம் நிதி உதவி வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
2006-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரும், 2008-ம் ஆண்டு ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்றவருமான ஜோசப் ஜேம்ஸ், சமீபத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி, ஏப்ரல் 24 அன்று தீவிர சுவாசக் கோளாறுக்கு ஆளானார்.
அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்ததால், ஹைதராபாத்தில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அவரை சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவர், மே 5 அன்று வீடு திரும்பினர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ள நிலையில் வீட்டு தனிமைப்படுத்துதலில் அவர் உள்ளார்.
சர்வதேச பவர்லிப்டிங் பயிற்சியாளரான ஜோசப் ஜேம்ஸுக்கு பண்டித தீன்தயாள் உபாத்தியாய் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலத் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.5 லட்சம் நிதி உதவி வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி உதவிக்காக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஜோசப் ஜேம்சின் மகள் அலிகா ஜோ நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட்-19-ன் போது முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.