

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உணவு தானியங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
கரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால் ஏழை மக்களின் துயரைக் களைவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி மே 17 வரை அனைத்து 36 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து 31.80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளன. மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடு முழுவதையும் லட்சத்தீவு பெற்றுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கேரளா, லடாக், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 15 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மே மாதத்திற்கான 100 சதவீத உணவு தானியங்களைப் பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் உரிய காலத்தில் இலவச உணவு தானியங்களைப் பெற்று, பயனடையுமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சுமார் 79.39 கோடி பயனாளிகளுக்கு மாதத்திற்குக் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் உதவியாக உணவு தானியங்களின் விலை, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து போன்ற செலவுகள் உட்பட மொத்தம் சுமார் ரூ. 26,000 கோடியை இந்திய அரசே ஏற்கும்.
முன்னதாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் முதல் கட்டத்திலும் (ஏப்ரல்- ஜூன் 2020), இரண்டாவது கட்டத்திலும் (ஜூலை- நவம்பர் 2020) 104 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 201 லட்சம் மெட்ரிக் டன் அரிசியென மொத்தம் 305 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.