Last Updated : 19 May, 2021 10:38 AM

 

Published : 19 May 2021 10:38 AM
Last Updated : 19 May 2021 10:38 AM

வீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் இளம்பெண்: ‘சிலிண்டர் மகள்’ எனப் பாராட்டும் பொதுமக்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஒரு இளம்பெண் வீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறார். இதனால், பலனடையும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அவரை ‘சிலிண்டர் மகள்’ என அழைக்கிறார்கள்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உத்தராகண்ட் எல்லையில் உள்ள ஷாஜாஹான்பூர். இதன் ஹுந்தால் கேல் பகுதியில் வசிக்கும் மஷ்கூர் அகமது கடந்த மாதம் இறுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இவருக்கு மூச்சு விடுவதிலும் சிக்கல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை உருவானது. இதற்காக அவரது மகளான அர்ஷி, மாவட்ட நிர்வாகத்தை அனுகியுள்ளார்.

இதில் தந்தை மஷ்கூரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி அர்ஷியிடம் அறிவுறுத்தி உள்ளனர். இதை விரும்பாத அர்ஷி தன் தந்தையை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதனால், ஷாஜஹான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ஒரு சிலிண்டரை பெற்றுள்ளார். இதை நிரப்ப அதன் எல்லையிலுள்ள உத்தராகண்டின் என்.ஜி.ஓக்களிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டவருக்கு பலன் கிடைத்துள்ளது.

இது குறித்து அர்ஷி கூறும்போது, ’உத்தராகண்ட் என் ஜி ஓக்களால் எனது தந்தை கரோனாவிலிருந்து குணமாகி உயிர் பிழைத்தார். இதேமுறையை பயன்படுத்தி இங்கு பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை அளிக்க முடிவு செய்து அளித்து வருகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அர்ஷி, அருகிலுள்ள உ.பி.யின் ஹர்தோய், உத்தராகண்டின் உதாம் சிங் நகர் மாவட்டங்களிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை பெறுகிறார். இதுவரை, தனது ஸ்கூட்டியில் வைத்து சுமார் 45 சிலிண்டர்களை இலவசமாக விநியோகித்துள்ளார் அர்ஷி.

இதன் காரணமாக அவரை ஷாஜாஹான்பூர்வாசிகள் செல்லமாக ‘சிலிண்டர்வாலி பேட்டியா (சிலிண்டர் மகள்)’ என்றழைக்கத் துவங்கி உள்ளனர். அர்ஷியை பற்றிய செய்திகளை தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு உ.பி.வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x