

நாரதா வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.பி. சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 4 பேரிடம் விசாரிக்கவும், கைது செய்யவும் மக்களவைத் தலைவரின் அனுமதியை எதிர்பார்த்து சிபிஐ காத்திருக்கிறது.
நாரதா டேப் விவகாரம் வெளியானதுபோது அதில் சுவேந்து அதிகாரியும் சிக்கினார். அப்போது அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்தார்.ஆனால், தற்போது பாஜகவில் சேர்ந்து நந்திகிராம் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தனகரிடம் அனுமதி கோரியது. அதற்கு ஆளுநரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆனால், இந்த நாரதா வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சுவேந்து அதிகாரியை மட்டும் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்த ஸ்டிங் ஆப்ரேஷனை நடத்திய பத்திரிகையாளர் மேத்யூ கேள்வி எழுப்பியிருந்தார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ சாரதா டேப் வெளியானபோது, சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார்.
சுவேந்து அதிகாரி, சவுகதா ராய், பிரசுன் பானர்ஜி, காகாலி கோஷ் தாஸ்திதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மக்களவைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். சாரதா டேப் விவகாரம் நடந்தபோது, இந்த 4 பேரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார்கள். மக்களவைத் தலைவர் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர் அனுமதி கிடைத்தால் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில் “ நாரதா டேப் விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை கைதுசெய்த சிபிஐ சுவேந்துஅதிகாரி, முகுல் ராயை மட்டும் கைது செய்யவில்லை. இருவரும் தற்போது பாஜகவில் இருக்கிறார்கள். நாங்கள் நீதித்துறையின் மீது நம்பி்க்கை வைத்துள்ளோம், விரைவி்ல் உண்மை வெளியாகும்”எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபாஸ் ராய் கூறுகையில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதால், திட்டமிட்டு பழிவாங்க முயல்கிறது” எனத் தெரிவி்த்தார்.