Last Updated : 19 May, 2021 08:05 AM

 

Published : 19 May 2021 08:05 AM
Last Updated : 19 May 2021 08:05 AM

கரோனா தொற்றுக்கு ஆதித்யநாத் அரசில் 3-வது அமைச்சர் பலி; பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

உத்தரப்பிரதேச அமைச்சர் விஜய் காஷ்யப் | படம் உதவி ஃபேஸ்புக்

லக்னோ


உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 3-வது அமைச்சர் நேற்று உயிரிழந்தாா்.. மாநிலத்தின் வருவாய் மற்றும் வெள்ளத்தடுப்பு அமைச்சர் விஜய் காஷ்யப் கரோனா தொற்றுக்கு பலியானார்.

56 வயதாகும் விஜய் காஷ்யப் முஷாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சார்தவால் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் விஜய் காஷ்யப் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காஷ்யப் உயிரிழந்தார்.

ஆதித்யநாத் அமைச்சரவையில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் 3-வது அமைச்சர் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் ஆகியோர் கரோனா தொற்றுக்கு பலியானார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 5 எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர். சலோன் தொகுதி எம்எல்ஏ தால் பகதூர் கோரி, நவாப்காஞ்ச் தொகுதி எம்எல்ஏ கேசர் சிங் கங்வார், அவாரியா தொகுதி எம்எல்ஏ ரமேஷ் திவாகர், லக்னோ மேற்கு தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உ.பி. அமைச்சர் விஜய் காஷ்யப் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் “ பாஜக தலைவரும், உ.பி. அமைச்சருமான விஜய் காஷ்யப்பின்மறைவுச் செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடித்தட்டு மக்களுடன் ஆழ்ந்த பிணைப்புடன் பயணித்த தலைவர், மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்தவர் விஜய் காஷ்யப். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ உ.பி.பாஜகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான விஜய் காஷ்யப் மறைவால் வேதனை அடைகிறேன். பொதுச்சேவையில் ஆர்வமாக இருக்கும் அவரின் செயல்பாடுகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னுடை வருத்தங்கள். அந்தக் குடும்பத்தினரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ உ.பி. அமைச்சர் விஜய் காஷ்யப் மறைவு முழுமையாக என்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டர், பாஜகவுக்கு அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ என்னுடைய அமைச்சரவையில் சக அமைச்சர் விஜய் காஷ்யப் கரோனாவில் உயிரிழந்தது எனக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x