

திரிபுரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆளும் இடது முன்னணி அமோக வெற்றிப் பெற்றது.
திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 49 நகராட்சி வார்டுகளுக்கும் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் முழு பெரும்பான்மை பலம் பெறும் வகையில் ஆளும் இடது முன்னணி மகத்தான வெற்றி பெற்றது. 20 உள்ளாட்சி அமைப்புக்கான 310 இடங்களில், ஆளும் இடது முன்னணி மட்டும் 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 13 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய இரு இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். 49 நகராட்சி வார்டு தேர்தலில், 45 வார்டுகளை இடது முன்னணி கைப்பற்றியுள்ளது.
இந்த அமோக வெற்றியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடது முன்னணி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருப்பதை பொலிட்பீரோ பாராட்டுகிறது. முழு ஆதரவு அளித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசின் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.