

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து கரோனா பரவல்மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கரோனாவின் முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலையின் வீரியம் அதிகஅளவில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதும் தொடர் கதையாகி இருக்கிறது.
வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் உயிரிழப்பது ஒருபுறம் இருந்தாலும், உயிர் காக்கும் மருத்துவர்களும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி அதிக அளவில் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் டாக்டர் ஜெயலால் கூறியதாவது:
கரோனா முன்களப் பணியாளர்களில் முதன்மையானவர்களாக மருத்துவர்கள் இருக்கின்றனர். ஆதலால், வைரஸ் தொற்றுக்கு அவர்கள் எளிதில் இரையாகி விடுகின்றனர். இந்தியாவில் சுமார்8 மாதங்கள் நீடித்த கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிய 3 மாதங்களுக்கு உள்ளாகவே, 270 மருத்துவர்களை நாம் இழந்திருக்கிறோம். இது மிகவும் வேதனையளிக்கும் விஷயம்.
இந்த இரண்டாம் அலைக்குபிஹாரில் தான் அதிக மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளாகி 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் (37), டெல்லி (29), ஆந்திரா (22) மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.