

குஜராத் மாநிலத்தில் டவ் -தே புயல் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. கடும் புயல் உருவானதால் புயலை எதிர்கொள்வதற்காக குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.
புயல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் கரையைக் கடந்தபோது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு தலைவர் எஸ்.என். பிரதான் கூறும்போது, “நான் பார்த்த புயல்களிலேயே அதிக நாசத்தை விளைவித்த புயல் இதுதான். புயல் காரணமாக குஜராத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து நசுக்கியுள்ளன. ஏராளமான சொத்துகள் சேதமடைந்துள்ளன. புயல் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். மீட்பு, நிவாரணப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நேற்று புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 190 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியுள்ளது.பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன” என்றார்.