

நாட்டின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழில் புரிவோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை வழங்குவதாக உள்ளது. மே மாதத்தில் இதுவரையில் 1.85 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கரோனா பரவல் கிராமப்பகுதிகளிலும் கடுமையாக தாக்கியுள்ளது. இருப்பினும் வேலை உறுதித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படாத வகையில் நிறைவேற்றப்படுவதாக அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
2019-ம் ஆண்டு மே மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கிய அளவைக் காட்டிலும் 52 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 1.22 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2021-22 நிதி ஆண்டில் மே 13-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2.95 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 34.56 கோடி மனித நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.