கீழ்த்தர அரசியல் நடத்துகிறது ஆம் ஆத்மி: கேஜ்ரிவாலுக்கு எதிராக ஜேட்லி கொந்தளிப்பு

கீழ்த்தர அரசியல் நடத்துகிறது ஆம் ஆத்மி: கேஜ்ரிவாலுக்கு எதிராக ஜேட்லி கொந்தளிப்பு
Updated on
1 min read

அரசியலை ஆம் ஆத்மி கட்சியினர் தரக்குறைவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார்.

கீழ்த்தரம்தான் இந்திய அரசியலின் புதிய நடைமுறையா? என்ற தலைப்பில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் சில உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றை கட்சியே அங்கீகரிக்கவில்லை. இதனையடுத்து கட்சித் தலைமை அவர்களை எச்சரித்தது, அத்தகைய கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அந்த எச்சரிக்கையின் பலன் தற்போது வெளிப்படை. ஆனால்...

மாண்புமிகு டெல்லி முதல்வர், பிரதமர் மீதும் மற்றவர்கள் மீதும் டெல்லி சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசி வரும் கருத்துகள் எத்தகையது? இந்தியாவில் எந்த ஒரு அரசும் இத்தகைய மொழியில் பேசினால் அது நாடுதழுவிய மூர்க்கத்தனத்துக்கே இட்டுச் செல்லும்.

பதவியிலிருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. அவர்கள் எல்லை மீறி பேசகூடாது. தரக்குறைவான பேச அவர்களுக்கு உரிமை இல்லை. அரசியல் சொல்லாடல்கள் கீழ்த்தரமான மொழியினால் அமைவது கூடாது. தவறான குற்றச்சாட்டுகளை கீழ்த்தரமான உரத்த குரல்களில் கூறுவது உண்மைக்கு பதிலீடாகிவிடாது.

பொதுவெளியில் தெரிவிக்கும் கருத்துகளை கீழ்த்தரமாக்குவது அரசியலின் உயர்நிலைக்கு வழிவகுக்காது. டெல்லி அரசை நடத்துபவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அரசியல் சொல்லாடலின் தரத்தை அடிமட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பொத்தாம் பொதுவாக தவறுகள் என்று கூறுகின்றனரே தவிர அவர்களிடம் குறிப்பாக சொல்ல எதுவும் இல்லை.

டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி காங்கிரஸ் கட்சியையும் தவறாக வழிநடத்தியுள்ளது, அதாவது தரக்குறைவான அரசியல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் கட்சியும் நினைத்து விட்டது.

இந்தியாவில் பொதுக்கருத்தில் எப்பவுமே ஒரு நியாய உணர்வு இருந்து வருகிறது. எனவே தரக்குறைவான அரசியலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இதுவே."

இவ்வாறு கூறியுள்ளார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in