

பஞ்சாப் மாநிலத்தில் 2 தலித் இளைஞர்கள் மீதான தாக்கு தலைக் கண்டித்து மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு பாஜக எம்.பி.க்கள் ரோஜா பூக்களைக் கொடுத்தனர்.
மக்களவை நேற்று காலையில் கூடியதும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கக்கோரி பல உறுப்பினர்கள் கொடுத்திருந்த நோட்டீஸ்களை ஏற்க அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்டார். இந்தப் பிரச்சினைகள் குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்று கூறினார்.
ஆனால், “பஞ்சாப் மாநிலம் அபோஹரில் 2 தலித் இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இது மிக முக்கிய பிரச்சினை என்பதால், இதுகுறித்து விவாதிக்க அனு மதிக்க வேண்டும்” என்று மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதற்கிடையே அவையின் மையப் பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பஞ்சாபில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசுக்கு எதிரா கவும் கோஷம் எழுப்பினர். ‘பிரதமர் ஷேம் ஷேம்’, ‘பஞ்சாப் அரசை பதவி நீக்கம் செய்’ என்பன உள் ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அப்பகுதிக்குச் சென்ற 6 பாஜக உறுப்பினர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ரோஜா பூக்களைக் கொடுத்தனர். இதற்கிடையே, சில மூத்த பாஜக உறுப்பினர்கள், ரோஜா பூக்களைக் கொடுத்த தங்கள் கட்சி உறுப்பினர்களைப் பிடித்து இழுத்தனர். இதனால் சில பூக்கள் மக்களவை செயலக அதிகாரி களின் மேஜை மீது சிதறிக் கிடந்தன.
இதற்கிடையே கேள்வி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கள் கைதட்டியபடி கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் கேள்வி கேட்ட உறுப்பினர் மற்றும் அதற்கு பதில் அளித்த அமைச்சர்களின் குரல்கள் தெளிவாகக் கேட்கவில்லை. இதையடுத்து சுமித்ரா மகாஜன் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.