Last Updated : 18 May, 2021 07:28 PM

 

Published : 18 May 2021 07:28 PM
Last Updated : 18 May 2021 07:28 PM

கோவையில் படித்த உ.பி. இரட்டையர் சகோதரர்கள் கரோனாவில் அடுத்தடுத்து உயிரிழப்பு: மீரட்டில் சோக நிகழ்வு

இரட்டையர் சகோதரர்கள் ஜோபிரட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி | படம் உதவி ட்விட்டர்

மீரட்

உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கடந்த வாரம் தங்களின் 24-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரட்டையர் சகோதரர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்து பெற்றோரை மீளாத் துயரில் விட்டுவிட்டனர்.

மீரட்டைச் சேர்ந்த தம்பதி கிரிகோரி ரேமண்ட் ரஃபேல், சோஜா ரஃபேல். இருவருமே உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஜோபிரட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் இரட்டையர்கள், 3 நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தவர்கள்.

இருவரும் தங்கள் இளங்கலை பி.டெக் படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதில் ஜோபிரட் அசென்சர் நிறுவனத்திலும், ரால்பிரட் ஹூண்டாய் நிறுவனத்திலும் பணியாற்றினர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோபிரட் வீட்டில் இருந்தபடியே பணியற்றி வந்தார், ரால்பிரட்டுக்கு கையில் காயம் காரணமாக விடுமுறையில் ஹைதராபாத்திலிருந்து மீரட் நகரில் உள்ள வீட்டுக்கு வந்திருந்தார்.

பெற்றோருடன ஜோபிரட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி

இருவரும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தங்களின் 24-வது பிறந்தநாள் கொண்டாடினர். அடுத்த இரு நாட்களில் இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதன்பின் கடந்த 1-ம் தேதி மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் இரட்டை சகோதர்கள் இருவரும் உடல்நலம் தேறினர், மே 10ம் தேதி நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் என வந்ததால், குடும்பத்தினர் மகிழச்்சி அடைந்தனர்.

ஆனால், அதன்பின்புதான் அந்தச் சோகம் நிகழ்ந்தது. அடுத்த 3 நாட்களில் இரட்டையரில் ஒருவரான ஜோபிரட் திடீரென உயிரிழந்தார். இருவரும் இரட்டையர்கள் என்பதால், கரோனா பாதிப்பும் ஒரே மாதிரியாக ஏற்பட்டது, குணமடைந்ததும் ஒரேமாதிரியாக இருந்தது என்பதால், உயிரிழப்பும் ஒரேமாதிரியாக இருக்குமே என பெற்றோர் அச்சப்பட்டனர்.

அதுபோலவே நடந்தது, அடுத்த சில மணிநேரத்தில் மற்றொரு சகோதரரான ரால்பிரடும் கரோனாவில் உயிரிழந்தார். இருவருக்கும் கரோனா வைரஸ் நுரையீரல் ஆழமாகப் பாதித்ததால் உயிரிழப்பு நேரந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது இருமகன்களையும் பறிகொடுத்த தந்தை கிரிகோரி ரேமண்ட் ரஃபேல் கூறுகையில் “ எங்களுக்கு மொத்தம் 3 மகன்கள். ஜியோபிரட், ரால்பிரட் இரட்டையர் சகோதரர்கள் தவிர, நெல்பிரட் என்ற மகன் இருக்கிறார். இவர்தான் மூத்தவர். கரோனாவில் எனது இரட்டையர் மகன்களை பறிகொடுத்து மீளமுடியாத துயரத்தில் குடும்பத்தினர் இருக்கிறோம்.

கரோனா எனது இரு கண்களையும் பறித்துக்கொண்டது, இதுபோல் வாழ்க்கையில் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது. இரு மகன்களையும் காப்பாற்ற எவ்வளவோ போராடினோம். இருவரும் கரோனாவிலிருந்து குணமடைந்தபின் ஒருவர் ஜெர்மனிக்கும், மற்றொருவர் தென் கொரியாவுக்கும் செல்ல திட்டமிட்டனர். எனக்கு கடவுள் இவ்வளவு பெரிய தண்டனையே ஏன் கொடுத்தார் எனத் தெரியவில்லை” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x