முதல்வர் பினராயி விஜயன் மருமகனுக்கு அமைச்சர் பதவி; கே.கே.சைலஜாவுக்கு இடமில்லை: புதியவர்களுக்கு மட்டுமே இடம்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா | படம் உதவி: ட்விட்டர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் அமைச்சரவையில் புதியவர்களுக்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பெருந்தொற்றுகளைச் சிறப்பாகக் கையாண்டு உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை.

முதல் முறையாக எம்எல்ஏவான பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.

முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்

மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20ஆம் தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

கேரளாவில் அமையும் புதிய அரசில் 21 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக உருவாக்கப்பட உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், மருத்துவர் ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

முகமது ரியாஸ், பினராயி விஜயன்.
முகமது ரியாஸ், பினராயி விஜயன்.

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. சபாநாயகராக எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவைச் செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.ஷம்ஷீர் கூறுகையில், “முதல்வர் பினராயி விஜயன் 2-வது முறையாக வரும் 20-ம் தேதி பதவி ஏற்கிறார். அவர் மட்டுமே அமைச்சரவையில் ஏற்கெனவே இருந்தவர். மற்ற 11 பேரும் அமைச்சரவைக்குப் புதியவர்கள். இளைஞர்களும், முதியோரும் கலந்த கலவையாக அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. சைலஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்காதது என்பது கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in