Last Updated : 18 May, 2021 03:26 PM

 

Published : 18 May 2021 03:26 PM
Last Updated : 18 May 2021 03:26 PM

இந்தியாவின் தோற்றத்தையும், பிரதமர் மோடி மீதான மரியாதையையும் சிதைக்க காங்கிரஸ் விரும்புகிறது: பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவின் தோற்றத்தையும், பிரதமர் மோடி மீதான மரியாதையையும் சிதைக்க காங்கிரஸ் விரும்புகிறது. உருமாறிய கரோனா வைரஸை, இந்தியாவின் உருமாறிய கரோனா வைரஸ், மோடியின் உருமாறிய வைரஸ் என்று கூறி, தேசத்தின் மரியாதையைச் சிதைக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

''பிரதமர் மோடி மீதான மரியாதையைச் சிதைப்பதற்காக காங்கிரஸ் கட்சி பெரிய டூல்கிட்டைத் தயாரித்துள்ளது. குறிப்பாக கரோனா வைரஸ் மேலாண்மை, மதரீதியான விஷயங்கள், மத்திய விஸ்டா திட்டம் ஆகியவை குறித்து அவதூறு பரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் இருக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் உருமாறிய கரோனா வைரஸை, மோடியின் உருமாறிய கரோனா வைரஸ் என்று அழையுங்கள். இந்தியாவின் உருமாறிய கரோனா வைரஸ் என அழையுங்கள் என்று உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்த கரோனா காலத்தில் சில பத்திரிகையாளர்கள் உதவியுடன் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து, மக்கள் தொடர்புக்கான பயிற்சியாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா

இந்த கரோனா பெருந்தொற்றுக் காலத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதான மரியாதையைச் சிதைக்க விரும்புகிறார். உருமாறிய கரோனோ வைரஸா, மோடியின் உருமாறிய வைரஸ் என்று அழையுங்கள் என காங்கிரஸ் கட்சி, அதன் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் உதவியுடன் இந்தியாவின் தோற்றத்தையும், மதிப்பையும் குலைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் உருவான உருமாற்ற கரோனா வைரஸ் என்று ஏதுமில்லை. அவ்வாறு நாங்கள் அழைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் என அழைக்க விரும்புகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசத்தின் மதிப்பையும், தோற்றத்தையும் சிதைக்கத் தயாராக இருக்கிறது''.

இவ்வாறு சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆய்வுத்துறையின் தலைவர் ராஜீவ் கவுடா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ காங்கிரஸ் கட்சியின் ஆய்வுப் பிரிவுக்குக் களங்கும் விளைவிக்கும் நோக்கில் பாஜக போலியான டூல்கிட்டைத் தயாரித்துப் பரப்புகிறது.

மோசடியில் ஈடுபட்டதற்காக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சம்பித் பத்ரா ஆகியோர் மீது புகார் செய்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம். நம்முடைய தேசம் கரோனாவில் சீரழிந்துவரும்போது, உதவிகள், நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, பாஜக வெட்கமில்லாமல் மோசடிகளை உருவாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x