

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூர்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைக்க வேண்டும், பரிசோதனையின் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள், களப் பணியாளர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கர்நாடகா, பிஹார், அசாம், சண்டிகர், தமிழகம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்ட அதிகாரிகள், களப் பணியாளர்கள், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். பிரதமர் மோடியும் பல அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல், நல்ல சிகிச்சை அளித்தல் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். வைரஸைத் தோற்கடிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் முக்கியமான பங்காற்றி வருகிறீர்கள்.
போர்க்களத்தில் நீங்கள்தான் கமாண்டர்கள். கரோனா வைரஸுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஆயுதம் என்ன தெரியுமா? உள்ளூர் அளவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைப்பதும், பரிசோதனை அளவை அதிகப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சரியான, முழுமையான தகவல்களைச் சேகரிப்பதும்தான் நம்முடைய ஆயுதங்கள்.
பல மாநிலங்களில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், சில இடங்களில் அதிகரித்து வருகிறது என்பதை கவனியுங்கள். கரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான பணியில் தீவிரமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாக நான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கரோனா 2-வது அலையில் கிராமங்களில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆதலால், கிராமங்கள், போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளில் அதிகமான கவனம் செலுத்தி கரோனா பரவலைக் குறைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எளிமையாக வாழ்வதற்கான சூழலைப் பாதுகாக்க வேண்டும். தொற்று பரவுவதைத் தடுத்து, மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎம் கேர்ஸ் நிதியுதவி மூலம் ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தேவையற்ற கட்டுக்கதைகள் பரப்பி விடப்படுகின்றன. நம்பகத்தன்மையற்ற தகவல்கள் செல்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கியமானது. தடுப்பூசி சப்ளையை அதிகப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதிலும், சப்ளையைச் சீரமைப்பதிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.