கொலை வழக்கு; தலைமறைவு மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு: டெல்லி போலீஸார் அறிவி்ப்பு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் | படம் உதவி: ட்விட்டர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
1 min read

டெல்லியில் மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார் குறித்துத் தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.

அதேபோல இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் மற்றொரு நபரான அஜய் குறித்துத் தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி விசாரணை நீதிமன்றம், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி, சுஷில் குமார் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in