

''நாரதா டேப் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்களை சிபிஐ கைது செய்தது மனநிறைவு அளிக்கிறது என்றாலும், இந்தக் குற்றத்தில் முக்கியமான நபராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை ஏன் சிபிஐ கைது செய்யவில்லை. தற்போது அவர் பாஜகவில் இருப்பதால் கைது செய்யவில்லையா?'' என்று நாரதா ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்திய பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2014ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தனகரிடம் அனுமதி கோரியது. அதற்கு ஆளுநரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நாரதா ஸ்டிங் ஆப்ரேஷனை அப்போது மூத்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தலைமையிலான குழுவினர் நடத்தினர். நீண்ட காலத்துக்குப் பின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய சுவேந்து அதிகாரியை ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும், நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டியதும் அவசியம். நாங்கள் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் நீண்ட காலத்துக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏ என 4 பேரை சிபிஐ கைது செய்தது திருப்தியாக இருக்கிறது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக எந்தவிதமான குற்றப்பத்திரிகையும் இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை. அவர்களிடம் நெருங்கக்கூட இல்லை.
இந்த வழக்கில் முக்கியமானவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரி அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது பாஜகவுக்கு மாறிவிட்டார். அவரை சிபிஐ கைது செய்யாதது வருத்தமாக இருக்கிறது. பாஜகவில் சுவேந்து அதிகாரி இருப்பதால் சிபிஐ கைது செய்யவில்லையா? அதேபோல் திரிணமூல் காங்கிரஸில் இருந்த முகுல் ராயும் இந்த வழக்கோடு தொடர்புடையவர்தான். ஆனால், அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை” எனத் தெரிவித்தார்.