பிரதமர் மோடி குறித்து சுவரொட்டி ஒட்டியதாக 25 பேர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக 25 பேர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

டெல்லியில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

"நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்" என்று கேள்வி எழுப்பி சுவரொட்டிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸார் இதுவரை 20க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து 25 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைதை ரத்து செய்யக்கோரியும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் காவல் ஆணையர், காவல் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரதீப் குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது

“அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துரிமையைப் பொதுக் காரணத்துக்காகப் பயன்படுத்தலாம் என நீதிமன்றம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ ன்படி கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் சமூக வலைதளத்தில் ஒருவர் தகவல்களைப் பகிர்தல் கிரிமினல் குற்றமாகாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சமூக வலைதளத்தில் கரோனா காலத்தில் மருத்துவ உதவி கோரி யாரும் கருத்துகளைப் பதிவிட்டால், அரசு வழக்கு ஏதும் பதிவு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை மக்கள் கேள்வி கேட்டால் அது கிரிமினல் குற்றமாகாது.

ஆனால், தடுப்பூசி தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்ததற்கும், சுவரொட்டி ஒட்டியதற்கும் கைது செய்யப்பட்டது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாகச் செயல்படுவதாக இருக்கிறது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும், அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதற்காக அப்பாவி மக்கள் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிப் படிப்பை நிறுத்திய 19 வயது நபர், ரிக்ஷா ஓட்டுநர், 61 வயது முதியவர், உள்ளிட்ட 25 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும், கைதை ரத்து செய்யவும் உத்தரவிட போலீஸ் ஆணையருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்''.

இவ்வாறு பிரதீப் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in