

நாரதா டேப் வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர், ஒரு எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை நள்ளிரவில் விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அந்த ஜாமீனுக்குத் தடை விதித்தது.
இதையடுத்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா, திரிணமூல் காங்கிரஸ் மூத்ததலைவர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தனகரிடம் அனுமதி கோரியது.
அதற்கு ஆளுநரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மே.வங்க அமைச்சர்கள், எம்எல்ஏ கைது செய்யப்பட்டதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர், உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிபிஐ அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் திரண்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்தி, கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிபிஐ அதிகாரிகளை வெளியேவிடாமல் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், முதல்வர் மம்தா , அமைச்சர்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், காணொலி மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர்களையும், எம்எல்ஏவையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை கோரி மேல்முறையீடு செய்தனர். அந்த முறையீட்டில், “ நாரதா வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர், எம்எல்ஏ ஒருவர் உள்பட 4 பேரைக் கைது செய்துள்ளோம். ஆனால் சிபிஐ அதிகாரிகளை அவர்களின் கடமையைச் செய்யவிடாமல் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்கிறார்கள்.
முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுகிறார்கள். சிபிஐ அதிகாரிகளால் வெளியே வரமுடியாமல், கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறர்கள்.
இதனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆதலால் ஜாமீனுக்கு தடை விதித்து, சிபிஐ அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய வழி ஏற்படுத்த வேண்டும். சிபிஐ அதிகாரிகளுக்கு மாநிலப் போலீஸார் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இரவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிந்தால், அர்ஜித் பானர்ஜி அமர்வில் விசாரிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் சொலிசி்ட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
அப்போது சொலிசி்ட்டர் ஜெனரல் வாதிடுகையில், “ மாநிலத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துவிட்டது. சிபிஐ அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் உள்பட 4 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக்கூடாது.
நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு அதுதான் கடைசி புகலிடம். ஆதலால், ஜாமீனை நிறுத்திவைக்க முகாந்திரம் இருக்கிறது.
அமைச்சர்கள் உள்ளி்ட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலி்ல் வைக்கப்பட வேண்டும். வழக்கை வரும் 19ம் தேதி மீண்டும் விசாரி்க்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேரும் இரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.