

குஜராத்தின் போர்பந்தர் அருகே ‘டவ் தே’ புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. கடலோரப் பகுதி களில் இருந்து 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுவடைந் தது. ‘டவ் தே’ என பெயரிடப்பட்ட இந்தப் புயல், அதிதீவிர புயலாகி மாறி, வடக்கு நோக்கி நகர்ந்தது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங் களில் கனமழை பெய்தது.
‘டவ் தே’ புயல் குஜராத்தில் திங்கட் கிழமை இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியதாவது:
சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 655 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர் பந்தர், அம்ரேலி, ஜுனகத், கிர் சோம்நாத், போடாத், பாவ்நகர், தேவ்பூமி துவாரகா, கட்ச், ஜாம்நகர், ராஜ்கோட், மோரி, வல்சாத், சூரத், வடோதரா, பரூச், நவ்சாரி, ஆனந்த், அகமதாபாத் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையைக் கடக்கும்போது மருத்துவமனைகளில் மின் விநி யோகம் பாதிக்கப்படக்கூடும் என் பதால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 174 நடமாடும் ஐசியு வாகனங்களும் 607 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமல்லாமல், 41 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (என்டிஆர்எஃப்), 10 மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கடலோரப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், குஜராத்தின் கட லோரப் பகுதியில் போர்பந்தர் அருகே நேற்று இரவு 8.40 மணி முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி யது. பலத்த மழையும் பெய்தது. புயல் கரையைக் கடக்க 2 மணி நேரத்துக்குமேல் ஆகியது.
புயல் காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. வொர்லி-மும்பை இடையேயான கடல்பால போக்குவரத்துக்கும் தடை விதிக்கப் பட்டது.
பிரதமர் ஆலோசனை
இதனிடையே, மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரேவை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
புயல் பாதிப்பு இருக்கும் என்பதால் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், புயலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதேபோல, கோவா, குஜராத் மாநில முதல்வர்கள், டாமன் அன்ட் டையூ யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் ஆகியோரையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.