Last Updated : 18 May, 2021 03:11 AM

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி தமிழ் விருது’ வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

புதுடெல்லி

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (சிஐசிடி) ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ ஜுன் 3-ல் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

செம்மொழி தமிழ் விருது, ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ், ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை மற்றும் கலைஞர் மு.கருணாநிதி உருவம் பொறித்த 10 பவுன் தங்கப் பதக்கம் ஆகியன கொண்டது.

இது, தொல்லியியல், கல்வெட்டியியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலை துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவினருக்கோ வழங்கப்படும்.

மத்திய அரசின் சிஐசிடி சார்பில் இந்த விருது ஒரு முறை மட்டுமே 2009- ல் வழங்கப்பட்டது. இதை பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு, கோவையில் 2010-ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு முதல்..

அதன்பின் 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு 2017-ல் வெளியானது. கடைசியாக ஏப்ரல் 2019வரையிலான விருது அறிவிப்பையும் சிஐசிடி வெளியிட்டது. ஆனால், விருதுகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்புதிதாக அமைந்த திமுக அரசு, செம்மொழி தமிழ் விருது வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சிஐசிடி.யை நிர்வகிக்கும் மத்திய கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘விருதுகளுக்கானத் தேர்வுப் பட்டியலை ஜூலை 2020, ஜனவரி2021 என 2 முறை ஒப்படைத் துள்ளோம்.

தற்போது மூன்றாவது முறையாக மே 12-ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேஷ் ஐஏஎஸ் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் சூழலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இந்த விருதுகளை எப்படி வழங்குவது என்பதை தமிழக அரசே முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமது பெயரில் ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒரு விருது அளிக்க கடந்த 2008 ஜூன் 30-ம் தேதி அறக்கட்டளை நிறுவி ரூ.1 கோடி வைப்புத் தொகை வழங்கினார். இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் விருது

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் குடியரசு தலைவரால் 8 ‘செம்மொழி விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது மற்றும் இளம் அறிஞர் விருது ஆகிய இம்மூன்றும் கடந்த 2016 முதல் வழங்கப்படாமல் உள்ளன. மற்ற மொழி விருதுகளுடன் சேர்த்து தமிழுக்கானதும் தற்போது தேர்வு செய்யப்பட்டு இறுதி முடிவுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருப்ப தாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x