

மேற்கு வங்க அமைச்சர்கள் இருவர், எம்எல்ஏ ஒருவரை நாரதா வழக்கில் சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என்று மேற்கு வங்க சபாநாயகர் பிமான் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தனகரிடம் அனுமதி கோரியது.
அதற்கு ஆளுநரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தக் கைது குறித்து அறிந்ததும் முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சிபிஐ அலுவலகம் முன் திரண்டதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மத்திய போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சபாநாயகர் பிமான் பானர்ஜி அளித்த பேட்டியில், “ அமைச்சர்களையும், எம்எல்ஏவையும் விசாரிக்கப் போகிறோம், கைது செய்யப்போகிறோம் என்பது குறித்து எனக்கு எந்தவிதமான கடிதமும் சிபிஐ அமைப்பிடம் இருந்து வரவில்லை. என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை.
எந்தக் காரணத்தின் அடிப்படையில் ஆளுநரிடம் சிபிஐ அதிகாரிகள் சென்றார்கள் எனத் தெரியவில்லை. அப்போது சபாநாயகர் பதவியும் காலியாக இல்லை. நானும் அலுவலகத்தில்தான் இருந்தேன். ஆளுநர் இதுபோன்று அனுமதி அளித்ததும் சட்டவிரோதம். ஆளுநர் அனுமதியின் பெயரில் எம்எல்ஏக்களைக் கைது செய்ததும் சட்டவிரோதம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கைது செய்யபப்ட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை இன்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.