

ஆந்திராவில் கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் முதல் அலை வந்தபோது, இதேபோன்ற சூழல் ஆந்திராவில் நிலவியது. ஏழை, எளிய மக்கள் தங்கள் குடும்பத்தாரில் ஒருவர் கரோனாவில் திடீரென உயிரிழக்கும்போது, அவர்களுக்கான இறுதிச்சடங்கிற்கு பணமில்லாமல் சிரமப்படுவது குறித்த செய்திகள்வெளியாகின.
இதையடுத்து, இறுதிச்சடங்கிற்கு ரூ.15ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகமோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதை தி்ட்டத்தை இப்போது மீண்டும் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆந்திரஅரசின் தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனாவி்ல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை இந்த செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆணையர் இதற்குரிய நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கீடு செய்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர், 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.