Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘டவ் தே’ அதிதீவிர புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது: 1.5 லட்சம் பேர் வெளியேற்றம்

புயல் காரணமாக கோவாவில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பனாஜி பகுதியில் மிகப்பெரிய மரம் வேரோடு சாலையில் சரிந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள், அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ

காந்திநகர்

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘டவ் தே’ அதிதீவிர புயல், குஜராத்தில் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அந்தமாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது நேற்று அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டவ் தே’ புயல், அதிதீவிர புயலாக மாறி, வடதிசை நோக்கி மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி கோவாவில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மும்பையில் இருந்து 450 கி.மீ. தொலைவிலும் குஜராத்தில் இருந்து 700 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடைந்து, குஜராத்தின் போர்பந்தர், பாவ்நகர் பகுதிகளுக்கு இடையே திங்கள்கிழமை (இன்று) மாலை அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புயல் கரையைக் கடக்கும்போது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை

புயல் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடகாவின் 6 மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. மழைகாரணமாக கர்நாடகாவில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்வர் எடியூரப்பா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘புயல் அச்சுறுத்தல் நீடிக்கும் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கோவாவில் வீடுகள் இடிந்தன

பலத்த காற்று, மழை காரணமாக கோவாவில் நேற்று மின் விநியோகம் தடை பட்டது. கோவாவில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறும்போது, ‘‘புயலால் கோவாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சரி செய்ய2 நாட்களுக்கு மேலாகும்’’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தில் 580 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். புயல் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மும்பையில் இன்று கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தயார் நிலையில் குஜராத்

குஜராத்தில் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, ‘‘சவுராஷ்டிரா, போர்பந்தர், பாவ்நகர், அம்ரேலி, ஜுனாகத், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் என்று கணித்துள்ளோம். கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 85 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா மருத்துவமனைகளில் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

ஆந்திரா, மேற்குவங்கம், புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் குஜராத்துக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். இதேபோல கோவா, கர்நாடகா, கேரளாவிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமித் ஷா அறிவுரை

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். புயல் காரணமாக கரோனா தற்காலிக மருத்துவமனைகள், ஆக்சிஜன் ஆலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்குமாறு இரு மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா ஆலோசனை வழங்கினார்.

புயல் தொடர்பாக மத்திய கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில் உள்துறை, மின்சாரம், கப்பல்,தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்து, மீன் வளம், ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா,கேரளா ஆகிய 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த 5 மாநிலங்களிலும் தேசிய பேரிடர்மீட்புப் படையை சேர்ந்த 79 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 22 கூடுதல்குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராணுவம், கடற்படை, கடலோர காவல் படையும் மீட்புப் பணியில் உதவ தயார் நிலையில் இருக்கிறது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா கூறும்போது, ‘‘5 மாநிலங்களிலும் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். உடனுக்குடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

மியான்மர் பல்லியின் பெயர்

அரபிக் கடல், வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான்,கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பெயர்களை பரிந்துரை செய்கின்றன.

புயலுக்கு பெயர் வைக்கும்போது அரசியல், மத நம்பிக்கை இல்லாமல் பொதுவான பெயர் சூட்ட வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. பெயரின் அளவு அதிகபட்சம் 8 எழுத்துகளில் இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.

தற்போது அரபிக் கடலில் உருவான புயலுக்கு ‘டவ் தே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மியான்மர் நாடு சூட்டிய பெயர் ஆகும். இது மியான்மரில் காணப்படும் ஒருவகை பல்லி இனத்தின் பெயர் ஆகும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x