

ஆந்திர அரசை தரக்குறைவாக பேசியதாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த அதிருப்தி எம்.பி. ரகுராம் கிருஷ்ணம்ம ராஜு மீது சிஐடி போலீஸார் தேச துரோக வழக்கு பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் கைது செய்தனர்.
இதனிடையே ஜாமீன் கோரி எம்.பி. ரகுராம் தரப்பில் குண்டூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரகுராமை சிஐடி போலீஸார் குண்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, தன்னை போலீஸார் பெல்ட், லத்தியால் அடித்து சித்ரவதை செய்ததாக எம்.பி. ரகுராம் தனது உடலில் இருந்த காயங்களை நீதிபதிகளுக்கு காண்பித்தார்.
அவர் அளித்த புகாரை ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்த மருத்துவ அறிக்கையை ஞாயிறு (நேற்று) மதியம் 12 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஆனால், நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் எம்.பி.யை போலீஸார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் எம்.பி.யை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து், அவர் குணமானதும், சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டது. ஆனால், போலீஸார், எம்.பி. ரகுராமை நேரடியாக குண்டூர் சிறைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதனிடையே நேற்று இரவு 7 மணிக்குதான் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனது கணவர் நக்சலைட்டோ, தீவிரவாதியோ கிடையாது என்றும், எம்.பியான அவரை போலீஸார் அடித்து துன்புறுத்தினர் எனவும், வலுக்கட்டாயமாக அவரை சிறையில் அடைத்துள்ள போலீஸாரால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது மனைவி ரமாதேவி கூறியுள்ளார்.