

உலகின் முன்னணி தேடியந்திர தளமான கூகுளில், நடப்பு 2015-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்த வகைப் பட்டியலில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இரண்டு தலைப்புகளில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை குறித்த வகைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள்:
போக்குகளும் தேடல்களும்
இணையத்தின் போக்குகள் (Trending) அடிப்படியில் அதிகம் தேடப்பட்டவைக்கான பட்டியலில், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை முதலிடத்திலும், பாகுபலி திரைப்படம் இரண்டாம் இடத்திலும், பஜ்ரங்கி பைஜான் படம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்களே ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பட்டியலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இடம்பெற்றுள்ளார். அவர் ஆறாவது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
அதிகம் தேடப்பட்ட நபர்கள்
கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில், 2014-ஐ தொடர்ந்து இந்த ஆண்டும் நடிகை சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கலாமை தேடிய கரங்கள்...
இந்த ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை டைப் செய்து, கூகுள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேடியுள்ளனர். இதன் காரணமாக, கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் அப்துல் கலாம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, நடிகைகள் கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன், ஷாரூக்கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இம்முறை 10-ம் இடத்தில் உள்ளார்.
அதிகம் தேடப்பட்ட தேடல்கள்
கூகுள் இந்தியா தேடல்களில் இந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது, 'அதிகம் தேடப்பட்ட தேடல்கள்' என்ற தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013, 2014 ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்த ஐஆர்சிடிசி இம்முறை இரண்டாம் இடத்தை வகித்துள்ளது. எஸ்பிஐ, அமேஸான், ஸ்நாப்டீல், இந்தியன் ரயில்வே, ஹெச்டிஎஃப்சி பேங்க், கிரிக்பஸ், வாட்ஸ்ஆப், பேடிஎம் ஆகியவை இந்தப் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளன.
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்
2015-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி முதல் இடத்தில் உள்ளது. பஜ்ரங்கி பைஜான் இரண்டாம் இடத்திலும், பிரேம் ரத்தன் தான் பாயோ, ஏபிசிடி 2 ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில், 'ஐ' 5-ம் இடத்திலும், 'புலி' 7-ம் இடத்திலும் உள்ளன.
அதிகம் தேடப்பட்ட செல்போன் சாதனங்கள்
கூகுள் இந்தியா தேடலில் இந்த ஆண்டு 'அதிகம் தேடப்பட்ட செல்போன் சாதனங்கள்' பட்டியலில் மைக்ரோமேக்ஸின் யூ யுரேகா (Yu Yureka) முதலித்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஐபோன் 6, லெனோவா கே3 நோட், லெனோவா ஏ7000 ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதேபோல், நுகர்வோரின் தொழில்நுட்பத் தேடல்களில் ஐபோன் 6 முதலிடத்தையும், சாம்சங் கேலக்ஸி எஸ்6 இரண்டாம் இடத்தையும், ஆப்பிள் வாட்ச் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், மெஸ்ஸி இரண்டாம் இடத்திலும், சச்சின் மற்றும் தோனி ஆகியோர் 3 மற்றும் 4-ம் இடத்திலும் உள்ளன.
கூகுள் தளத்தில் ஆங்கில வடிவில் உள்ள முழுமையான பட்டியல் ->See the Year in Search 2015