Published : 17 Jun 2014 08:50 AM
Last Updated : 17 Jun 2014 08:50 AM

ஐஏஎஸ் தேர்வில் பிஹார் மாணவர்கள் சாதனை: பிடெக் பயிலும் 22 வயது மாணவர் முதல் முயற்சியில் வெற்றி

கடந்த வியாழக்கிழமை வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவுகளில் பிஹாரில் இருந்து 24 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், பிடெக் இறுதியாண்டு பயிலும் 22 வயது மாணவர் மற்றும் மணமாகி 8 வருடம் ஆன பெண் உள்ளிட்டோர் கடும் உழைப்பால் வெற்றி பெற்று மாநிலத்தின் பெருமையை பறைசாற்றி உள்ளனர்.

பிஹாரில் ஒவ்வொரு வருடமும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தமுறை பெரிய மாற்றம் இல்லை. எனினும், ஆராவைச் சேர்ந்த 22 வயது மாணவர் உத்கிரிஷ்த் பிரஷுன் மற்றும் மணமாகி எட்டு வருடங்கள் முடிந்த பிரீத்தி சின்ஹா ஆகியோர் தங்கள் கடும் உழைப்பால் வெற்றி பெற்று அம் மாநிலத்தின் பெருமையை தக்க வைத்துள்ளனர்.

கான்பூர் ஐஐடியில் இறுதியாண்டு பயிலும் பிரஷுன், பிடெக் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இத்துடன் ஐஏஎஸ் தேர்வையும் எழுதியவருக்கு முதல் முயற்சியிலேயே 101-வது நிலையில் வெற்றி கிடைத்துள்ளது. இவரது பெற்றோர் தாமோதர் சிங் மற்றும் அபா சிங் ஆகியோர் தலைநகர் பாட்னாவில் கல்லூரி பேராசிரியர்களாக உள்ளனர்.

இதுபோல், பாட்னா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் போதே மணம் புரிந்த பிரீத்தி சின்ஹா, இரண்டுமுறை ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை.

இருப்பினும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி தன் முயற்சியை தொடர்ந்த அவருக்கு மூன்றாவது முயற்சியில் 828-வது நிலையில் வெற்றி கிடைத்துள்ளது. இவரது கணவர் டாக்டர்.ராஜீவ் நாராயண், டெல்லி தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை நிபுணராக இருக்கிறார். கணவரின் ஒத்துழைப்புதான் தனது வெற்றிக்கு காரணம் எனக் கூறுகிறார் பிரீத்தி.

முசாபர்பூரை சேர்ந்த பைஸ் அகமது மும்தாஜ் 17-வது இடத்தையும், அவுரங்காபாத்தை சேர்ந்த வருண் ரஞ்சன் 38-வது இடத்தையும், ஹாஜிபூரைச் சேர்ந்த குந்தன் குமார் 89-வது இடத்தையும், சிவாணை சேர்ந்த பிரதாப் என்.சிங் 94-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

பாகல்பூரை சேர்ந்த பொறியியல் படித்தவர்களான இரு மாணவர்களில் நிலோத்பால் 98-வது மற்றும் அவினேஷ் 100-வது நிலையிலும் வென்றுள்ளனர்.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.வான முன்னா ஷாஹி என்கிற கஜானந்த் ஷாஹியின் மகள் பிரேமா ஷாஹிக்கு 109-வது நிலை கிடைத்துள்ளது. கடந்த முறையும் இந்த தேர்வு எழுதி, இந்திய பொருளாதார சர்வீஸ் பயிற்சி பெற்று வந்தவர் இவர்.

இதில், தர்பங்காவை சேர்ந்த திவ்யான் ஷு, அகில இந்திய அளவில் 9-வது நிலை பெற்றாலும், பிஹார் மாணவர்களில் முதல் இடம் பெற்ற மாணவனாக இருக்கிறார். மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்ற அவருக்கு கடந்த முறை 648-வது நிலை கிடைத்தது. வெறும் கிரிமினல் குற்றங்களுக்கும், வேடிக்கையான அரசியலுக்கும் பெயர் போன பிஹாரிலும், ஐஏஎஸ் தேர்வில் மாணவர்கள் செய்யும் சாதனைகள் நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பிஹார் மாநில தொடக்கப்பள்ளி இயக்குநரகத்தின் இயக்குநராக இருக்கும் எம்.சரவணன் கூறுகையில், ‘பிஹார் மாநில மாணவர்கள் நல்ல உழைப்பாளிகள்.

கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் என்பதற்கான உதாரணம்தான் இது. உலகிலேயே பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா, இந்த மாநிலத்தில்தான் உருவானது.

இதுபோல், ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளிலும் பிஹார் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறுகிறார்கள்’ எனக் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x