Last Updated : 16 May, 2021 05:12 PM

 

Published : 16 May 2021 05:12 PM
Last Updated : 16 May 2021 05:12 PM

பிரதமர் மோடி எதிர்ப்பு சுவரொட்டிகளால் 25 பேர் கைதான விவகாரம்: மத்திய அரசுக்கு ராகுல், பிரியங்கா சவால்

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடிக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டியதாக 25 பேர் கைதாகி இருந்தனர். இதை கையில் எடுத்த காந்தி குடும்பத்தின் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வத்ராவும் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளனர்.

கரோனாவின் இரண்டாவது பரவல் மத்திய அரசுக்கு பல்வேறு தர்மசங்கடங்களை உருவாக்கி உள்ளது. இதில் ஒன்றாக நாடு முழுவதிலும் ஏற்பட்ட தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

இந்தவகையில், நேற்று டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. கறுப்புநிற சுவரொட்டியில் வெள்ளை நிற வாசகங்கள் இந்தியில் பெரிதாக இடம் பெற்றிருந்தன.

அதில், ‘மோடி ஜி! நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை நீங்கள் ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், பிரதமர் மோடியை அந்த சுவரொட்டிகள் விமர்சனம் செய்திருப்பதாக டெல்லி காவல்துறைக்கு புகார்கள் வரத் துவங்கின.

இதனால், தம் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி டெல்லியின் 25 காவல் நிலையங்களில் ஐபிசி 118 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து டெல்லியின் பல்வேறு மாவட்டங்களில் 25 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இச்செயலை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரான பிரியங்கா, அந்த சுவரொட்டியை தனது ட்விட்டர் பக்கத்தின் முகவரிப் படமாக்கி உள்ளார்.

இதேவகையில், காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியும் தன் டிவிட்டர் பக்க முகவரிக்கு படமாக்கி உள்ளார். இத்துடன் அவர், ஒரு படி மேல் எனும் வகையில், ‘என்னையும் கைது செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், அந்த இரண்டு எதிர்கட்சி தலைவர்களும், பிரதமர் நரேந்தர மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது, சட்டவிரோதமாகக் கருதப்பட்டு கைதிற்கு காரணமான சுவரொட்டிகளை மீண்டும் பதிவேற்றம் செய்து டெல்லி காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையிலும் அமைந்து விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x