

நாட்டிலேயே முதல்முறையாக கரோனா நோயாளிகள் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் முதல் தற்காலிக மருத்துவமனையில் கேரள மாநிலம் எர்ணாகுளம், அம்பலமுகலில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
கேரள அரசும், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து இந்த தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இதுவரை ஆக்சிஜன் வசதியுள்ள ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் எங்குமில்லை.
இந்த தற்காலிக சிகிச்சை மையம் குறித்த படங்களை முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1000 படுக்கைகள் கொண்ட அம்பலமுகலில் உள்ள கரோனா சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வருகிறது. கொச்சி பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நேரடியாக ஆக்சிஜன் இந்த சிகிச்சை மையத்துக்கு சப்ளையாகிறது. 130 மருத்துவர்கள், 240 செவிலியர்கள் உள்பட 480 ஊழியர்கள் பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கொச்சி மாவட்ட ஆட்சியர் எஸ் சுஹாஸ், பிபிசிஎல் தலைமை மேலாளர் குரியன் ஆலப்பாட் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில் “ கொச்சி அம்பலமுகல் நகரில் உள்ள பிபிசிஎல் பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1000 படுக்கைகளும், பள்ளிக்கூடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன . இந்த சிகிச்சை மையத்துக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர் தனியார் துறையிலிருந்து தேவைப்பட்டால் அமர்த்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் என்.கே.குட்டப்பன் கூறுகையில் “ இந்த தற்காலிகமான கரோனா சிகிச்சை மையத்தின் சிறப்பு என்னவென்றால், பிபிசிஎல் நிறுவனத்திலிருந்து நேரடியாக 1000 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் சுழற்ச்சி முறையில் பணியாற்ற 1000 செவிலியர்கள், 200 மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தனியார் துறையிலிருந்தும் நர்ஸுகள், மருத்துவர்கள் வருமாறு கேட்டுக்கொண்டோம். கரோனாவில் பாதிக்கப்பட்டு சுவாசப் பிரச்சினை இருக்கும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறலாம்” எனத் தெரிவித்தார்.