Last Updated : 22 Dec, 2015 11:00 AM

 

Published : 22 Dec 2015 11:00 AM
Last Updated : 22 Dec 2015 11:00 AM

மும்பை பெண் ஓவியர் கொலை வழக்கில் கணவர் கைது

மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யா, வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக ஹேமாவின் முன்னாள் கணவர் சிந்தன் உபாத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமா உபாத்யா (43) புகைப்படங்கள், சிறு சிற்பங்களை தனி பாணியில் கட்டமைத்து கண்கவர் ஓவியங்களை உருவாக் குவதில் வல்லவர். குஜராத் லலித் கலா அகாடமி உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவரது கணவர் சிந்தன் உபாத் யாவும் சிறந்த ஓவியர். எனினும் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதால் அவரிடம் இருந்து ஹேமா பிரிந்து தனியாக வாழ்ந்தார். மேலும் வீட்டுச் சுவர்களில் பெண்களின் ஆபாச படங்களை ஓவியமாக வரைந்து, தன்னை தினசரி துன்புறுத்து வதாகவும் எனவே சிந்தனிடம் இருந்து விவகாரத்து வழங்கக் கோரியும் ஹேமா சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹேமா சார்பில் வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆஜராகி வாதாடினார்.

இதன் பின்னர் சிந்தனிடம் இருந்து ஹேமா நிரந்தரமாக பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி இரவு ஹேமா வீடு திரும்பாததால், கலக்கம் அடைந்த அவரது வீட்டுப் பணியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே வேளையில் மும்பையின் புறநகர் பகுதியான கண்டிவலியில் ஹேமா மற்றும் வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானியின் சடலம் அட்டைப் பெட்டியில் திணிக்கப்பட்டு, சாக் கடை அருகில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக, ஆஸாத் ராஜ்பார், பிரதீப் ராஜ்பார், விஜய் ராஜ்பார் மற்றும் சிவகுமார் ராஜ்பார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில், ஓவியர் ஹேமாவின் முன்னாள் கணவர் சிந்தன் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் கண்டிவலி காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அப்போது தலைமறைவான முக்கிய குற்றவாளி வித்யாதர் ராஜ்பருடன் சேர்ந்து இந்த கொலைக் கான திட்டத்தை வகுத்ததாக அவர் ஒப்புக் கொண்டார். எனினும் கொலைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, போலீஸார் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி கோரினர். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 1-ம் தேதி வரை சிந்தனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. மற்ற 4 குற்றவாளிகளின் நீதிமன்ற காவலும் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x