

மத்திய அரசின் பேரழிவுதரும் தடுப்பூசிக் கொள்கையால், நாட்டில் 3-வது அலை வருவதை உறுதி செய்யும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் 45 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம், 18 வயது முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டது.
ஆனால், நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல்செய்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது, அடுத்த சில மாதங்களுக்குள் நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே 3-வது அலையைத் தவிர்க்க முடியும் என பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை தவறானது என்று காங்கிரஸ்கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமான கருத்துக்களை வைத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ மத்திய அரசின் பேரழிவுதரும் தடுப்பூசிக்கொள்கை, நாட்டில் கரோனா 3-வது அலை வருவதை உறுதி செய்கிறது. இந்தியாவுக்கு முறையான தடுப்பூசி கொள்கை அவசியம்.
1,140 கி.மீ நீளத்தில் பரந்திருக்கும் கங்கை நதியில் 2 ஆயிரம் உடல்கள் மிதந்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தன்னை கங்கை என அழைத்துக்கொண்ட ஒருவர், தற்போது கங்கை தாயை கண்ணீர்விட வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மற்றொரு ட்விட்டர் பதிவில் “ டவ் தே புயல் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கோவா, தமிழகம், குஜராத், கர்நாடகா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். காங்கிரஸ் தொண்டர்கள் தேவைப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள் “எனத் தெரிவித்துள்ளார்.