

மருத்துவ ஆக்சிஜனின் சேமிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட உருளைகள், அழுத்தமூட்டப்பட்ட களன்களுக்கு ஒப்புதல்களை விரைவாக வழங்க எரிவாயு உருளைகள் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளதாவது:
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஆக்சிஜன் உருளைகளை சர்வதேச உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை இந்திய அரசு ஆய்வு செய்தது.
கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, ஒப்புதலுக்கு முன் சர்வதேச உற்பத்தியாளர்களின் தயாரிப்பு வசதிகளை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் நேரடியாக ஆய்வு செய்ய முடியவில்லை.
இதை கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர் விண்ணப்பித்தவுடன் எந்தவித தாமதமும் இல்லாமல் ஒப்புதல் வழங்குவதற்காக ஆன்லைன் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரின் விவரங்கள், ஐஎஸ்ஓ சான்றிதழ், உருளைகள்/டேங்கர்கள்/கொள்கலன்கள், வரைபடங்கள், பேட்ச் எண், ஹைட்ரோ பரிசோதனை சான்றிதழ் மற்றும் மூன்றாம் நபர் ஆய்வு சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தற்போதைய அவசரகால நிலையை கருத்தில் கொண்டு, விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, உருளைகளை நிரப்புவதற்கான விதிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், முன்கூட்டியே கப்பலில் அனுப்புவதற்கான பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் சான்றிதழும் கட்டாயமில்லை.
ஆனால், ஆக்சிஜன் உருளைகள் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன் அவை இந்தியா மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பது குறித்து இந்திய தூதரகங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டிற்கு உகந்தது என்று ஏற்றுமதி செய்யும் நிறுவனமும் சான்றளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு இந்த தளர்வுகள் அமலில் இருக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.