பிளாக் ஃபங்கஸ் தொற்று புதிது அல்ல; கரோனாவில் தற்போது மீண்டும் மனிதர்களுக்கு பரவுகிறது: எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா | கோப்புப்படம்
எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா | கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் எனப்படும் மைகோர்மைகோகிஸ் தொற்று புதிதானது அல்ல, கரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென பிளாக் ஃபங்கஸ் அதிகரித்து மனிதர்களைத் தாக்குகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்தார்.

பிளாக் ஃபங்கஸ் தொற்று என்பது மைகோர்மைகோசிஸ்(mucormycosis.) என அழைக்கப்படுகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையில் மிகவும் மோசமான நிலையின்போது அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்த தொற்றுக்கு ஆளாகலாம். இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கை அதாவது முகோர்மைகோஸிஸ் தொற்றைத் தூண்டிவிடும்.கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த தொற்றால் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல்உறுப்பையும் நீக்க வேண்டியசூழல் ஏற்படலாம்.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நிதிஆயோக் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் நிருபர்களுக்கு நேற்றுப் பேட்டி அளித்தனர்.

அப்போது ரன்தீப் குலேரியா கூறுகையில் “ கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழப்பும் ஏற்படுகிறது. கணிசமாக இந்த தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த பிளாக் ஃபங்கஸ் தொற்று மனிதர்களுக்குப் புதிதானது அல்ல. ஏற்கெனவே காற்றில் இருப்பதுதான். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது எளிதாக மனிதர்களைத் தாக்குகிறது. காற்று, மண், உணவில்கூட இந்த பிளாக் ஃபங்ஸ் பாக்டீரியா இருக்கும் ஆனால், இதன் தீவிரத்தன்மை மிகக்குறைவுதான்.

ஆதலால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் வெளியே செல்லும்போது, முக்ககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். குறிப்பாக கட்டுமானப் பகுதிகளுக்குச் செல்லும்போது, முக்ககவசம் அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவனையில் பிளாக் ஃபங்ஸால் பாதி்கப்பட்டு 23 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 2-ம் தர தொற்றான பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த தொற்று புதிதானது அல்ல 2003ம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவானபோதுகூட பிளாக் ஃபங்கஸ் தொற்றும் ஏற்பட்டது. கரோனா பாதிபபின்போது, சர்க்கரை நோயால் பாதி்க்கப்பட்டவர்கள், ஸ்டீராய்ட் மருந்தை அதிகம் எடுத்துக்கொண்டவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வி.கே.பால்
வி.கே.பால்

பெரும்பாலும் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் ஸ்டீராய்ட் மருந்து கொடுத்தாலே போதுமானது. மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாக் ஃபங்கஸ் நோயால், சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும், சில நேரங்களி்ல் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்” எனத் தெரிவித்தார்.

வி.கே.பால் கூறுகையில் “ கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்திவர வேண்டும். இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டால் ஒருவர் தங்களுடைய மாத்திரைகளை கவனமாக எடுத்துக்கொண்டு, ஸ்டீராய்ட் மருந்தை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதுபோன்ற 2-ம்நிலை தொற்று வரக்கூடும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in